காஷ்மீர் குறித்த கருத்தை கூறிய அருந்ததி ராய் மீதும் தேச விரோத வழக்குக்கு அனுமதி
23:54 News Portal Labels: Politics
காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்தை எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசுக்கும் இது தெரியும் என கருத்தரங்கு ஒன்றில் அருந்ததிராய் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததிராய், இதுபோன்று பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவிப்பது உண்மையில் எதிர்பாராதது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சத்ய பிரகாஷ் மாலவியா தெரிவித்தார்.
அவரது கருத்து இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தும் என்பதால் வரலாற்று உண்மைகளுக்கு மாறான அக்கருத்தை திரும்பப் பெற வேண்டும் என சத்ய பிரகாஷ் வலியுறுத்தினார்.
இதை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தேச விரோதமாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து டெல்லி காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

