Feed

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

மலேஷியாவில் நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இஸ்லாமிய வங்கி முறைக் குறித்து ஆய்வு செய்து, அதனை இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படியும், அதனை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முனைய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்நாட்டு பிரதமர் முஹம்மது நஜிப் துன் அப்துல் ரஜாக்கை சந்தித்து, பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துக் கொள்ள முடிவானது. இந்த ஒப்பந்தம் 2011 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது.

மலேஷியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், மலேஷிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையைப் போன்று, இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதுபற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப் பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேஷியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.