Feed

அணு இழப்பீடு சட்டம்: அமெரிக்கா அஞ்சுவது ஏன்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதற்கு முன்னர், இந்தியாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றிய அணு விபத்து இழப்பீடு சட்டத்தில் தங்களுக்கு வசதியான மாற்றத்தைச் செய்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் இந்தியா வந்த அமெரிக்கக் குழு, அது அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடாது என்பதை அறிந்து ஏமாற்றமடைந்துள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையடுத்து ‘உரிய’ மாற்றங்களுக்குப் பின்னரே அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. பல நாட்கள் நடந்த தீவிரமான விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்ட்ட ஒரு சட்டத்தை, இந்திய அரசுடன் ஒரு ‘இணக்கமான பேச்சுவார்த்த’யின் மூலமதங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துவந்த அந்நாட்டின் அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கூடுதல் செயலர் வில்லியம் ஜே.பர்னஸ் தலைமையிலான குழு, அது நிறைவேறாது என்பதைப் புரிந்துகொண்டு, இந்தியா நிறைவேற்றியுள்ள அணு விபத்திற்கான கூடுதல் இழப்பு தொடர்பான பன்னாட்டு பிரகடனத்திற்கு உடன்பாடற்றது என்று கூறியுள்ளது.

பன்னாட்டு அணு சக்தி முகமையால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அணு விபத்து தொடர்பான கூடுதல் இழப்பீடு பிரகடனம், அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு ஒன்றில் அணு விபத்து ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் அனைவருக்கும் கூடுதல் இழப்பீடு (அந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு அளிக்கப்படும் இழப்பீட்டையும் தாண்டி) அளிக்க இந்தப் பிரகடனம் வழி செய்கிறது. இதில் கையெழுத்திடத் தயார் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. அதில் இப்போதும் சிக்கல் ஏதுமில்லை என்று இந்திய அரசு கூறுகிறது.

ஆனால் சிக்கல் எங்கிருக்கிறது என்றால், அணு விபத்து ஏற்பட்டால் அந்த அணு உலையை விற்ற நிறுவனம் இழப்பீட்டிப் பொறுப்பிற்கு உடபடுத்தும் இந்திய அணு விபத்து இழப்பீடு சட்டத்தின் 17(பி) பிரிவே. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்துகிறது. அதாவது அணு விபத்து இழப்பீட்டில் அமெரிக்க நிறுவனங்களை பொறுப்பாக்காதே என்கிறது!

அதனால்தான் அணு விபத்து இழப்பீடு வழங்குவதற்கு பன்னாட்டு கூடுதல் இழப்பீடு பிரகடனத்தைப் பற்றிப் பேசுகிறது. அது கூடுதல் இழப்பீடு தொடர்பானது மட்டுமே, அணு விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை தயாரித்து விற்ற நிறுவனத்தின் பொறுப்பென்ன? அதுதான் இந்திய அரசு கேட்கும் கேள்வி. அந்தப் பொறுப்பில் இருந்து தயாரிப்பாளர் என்ற முறையில் அணு உலையை விற்ற நிறுவனம் தனது இழப்பீடு பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு வெளியேறிவிட முடியாது. இதுதான் அமெரிக்காவிற்கு, அதாவது அதன் அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கசக்கிறது.

அமெரிக்காவின் முன்னணி அணு உலை தயாரிப்பு நிறுவனங்களான வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்டிரிக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இது தொடர்பாக பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் பேசியுள்ளன. அப்போது, அணு விபத்து நடந்தால் அதில் தங்களுக்கு எந்த இழப்பீடு பொறுப்பும் இருக்கக் கூடாது என்றும், அதற்கான பாதுகாப்பு (Insulation from Damage Claim) வேண்டும் என்றும் கோரியதாக செய்திகள் கூறுகின்றன.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.